Enable Javscript for better performance
Dindugal man gets married after double hand transplant- Dinamani

சுடச்சுட

  

  மாற்றுக் கைகள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்ற திண்டுக்கல் இளைஞருக்கு டும்..டும்..!

  By ENS  |   Published on : 15th April 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hand


  சென்னை: 2015ம் ஆண்டு விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமிக்கு அப்போது வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது. தனது அடிப்படைத் தேவைக்கும் ஒருவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

  ஆனால், தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் பாராட்டுக்குரிய செயலால் இன்று அதே நாராயணசாமி தனது நீண்டநாள் தோழியை கரம்பிடித்துள்ளார்.

  ஆம், தமிழகத்தில் இரண்டு கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நபராக இருக்கிறார் நாராயணசாமி. இவருக்கும், காதலி நதியாவுக்கும் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் வி. ரமாதேவி முன்னின்று நடத்தி வைத்தார். இவர்தான் நாராயணசாமிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இரண்டு மாற்றுக் கைகளைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்து, நாராயணசாமியின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர்.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் போடிக்காமன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.  கூலித்தொழிலாளி.    இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது ஒரே மகன் நாராயணசாமி.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாராயணசாமியால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலவில்லை. மேலும் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நாராயணசாமியின் தலையில் விழுந்தது. இதனையடுத்து பத்தாம் வகுப்பு முடிந்த உடனேயே கட்டட வேலைக்குச் சென்ற நாராணசாமி படிப்படியாக கொத்தனாராக உயர்ந்தார். 

  2015-ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி சித்தையன்கோட்டை என்ற இடத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கியபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் இவரது இரண்டு கைகளும் முழங்கைக்கு கீழே கருகிப்போனது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. 

  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் கொடுத்த ஆலோசனை மற்றும் உதவியுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த நாளே மூளைச் சாவு ஏற்பட்ட கொடையாளி ஒருவரின் இரண்டு கைகளும் அவருக்குப் பொருத்தப்பட்டன.  கடந்த ஓராண்டாகத் தொடர் சிகிச்சை, தொடர் கண்காணிப்பில் இருந்த நாராயணசாமி பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார்.

  ஸ்டான்லி மருத்துவமனை கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை இந்திய அளவில் புகழ்பெற்ற முதல்நிலை மையம் என்றாலும் மூளைச்சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவேதான் முதன்முறையாகும்.  உலகம் முழுவதும் 87 மருத்துவமனைகளில் இதுவரை 110 பேருக்கு இவ்வகை அறுவைச் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இது குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறியது:  முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையிலேயே வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் இது தொடர வேண்டும் எனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் தெரிவிக்கும் விருப்பம்தான் அவசியமானது ஆகும். மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்திற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் நோயாளிக்குப் பொருத்த வேண்டும்.  தாமதத்தைப் பொருத்து மீள்ச்சித் திறனும் குறையும் என்றார் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai