தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது மக்களுக்குத் தெரியும். ஆகவே தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் அளிக்க வேண்டும் என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது மக்களுக்குத் தெரியும். ஆகவே தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் அளிக்க வேண்டும் என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விவிஆர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக மதுரை முனிச்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்த அவர் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ், பாஜக ஆட்சி, மாநிலத்தில் அதிமுக, திமுக ஆட்சி நடந்திருக்கிறது. இதில் யார் சிறந்த ஆட்சி நடத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் தான் இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகள் நடந்தது. அப்போது மக்களவையில் 10 திமுக அமைச்சர்கள் கொலு பொம்மைகள் போல தான் இருந்தார்கள்.
 இலங்கையில் போர் பதற்றம் குறித்து அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அந்த போரை தடுக்க முயற்சிக்கவில்லை. இங்கு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறேன் எனக் கூறி விட்டு 3 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்துவிட்டது என உண்ணாவிரதத்தை முடித்தார். ஆனால் அதற்குபிறகு தான் அங்கு போர் உச்சத்தை அடைந்தது. அதனால் நாம் 4 லட்சம் தமிழர்களை இழந்தது தான் மிச்சம். அதனைத் தொடர்ந்து இலங்கை சென்ற திமுகவைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, அதிபர் ராஜபக்சே அளித்த விருந்தை முடித்துவிட்டு திரும்பினார்கள்.
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லியே முதல்வர் ஆகலாம் என பார்க்கிறார். ஆனால் அவரால் எப்போதும் தமிழக முதல்வர் ஆக முடியாது. அதிமுகவை மு.கருணாநிதியால் வெல்ல முடியவில்லை, அதேபோல மு.க.ஸ்டாலினாலும் வெல்ல முடியாது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போதே திமுகவினர் பிரியாணிக் கடையிலும், புரோட்டா கடையிலும், அழகு நிலையத்திலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
 இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னவாகும் என்பதை மக்கள் புரிந்து வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com