சுடச்சுட

  

  சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம்

  By DIN  |   Published on : 16th April 2019 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DMDK

  சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
   மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, தேமுதிக தேர்தலைச் சந்தித்து வருகிறது.
   தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் விஜயகாந்த் திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
   விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் வேனில் அமர்ந்து பிரசாரம் செய்தவாறே வந்தார். அவரது வேனுக்குப் பின்னால் 50-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் வந்தனர்.
   விஜயகாந்த் சாலையில் செல்வோரைக் கையெடுத்துக் கும்பிட்டவாறே வந்தார்.
   வில்லிவாக்கத்தில் பாமக வேட்பாளர் சாம்பால், விஜயகாந்தின் திறந்த வேனில் ஏறி நின்று வாக்கு கேட்டவாறு வந்தார். வில்லிவாக்கத்தில் முக்கிய இடங்களில் வாக்கு சேகரித்த அவர், கொளத்தூர் பகுதிக்குச் சென்றார்.
   அங்கு விஜயகாந்த் வந்தபோது வடசென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகாபுரம் மோகன்ராஜ் வேனில் ஏறிக் கொண்டார். அவரை ஆதரித்து கொளத்தூர் மூகாம்பிகை, பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
   மூலக்கடைப் பகுதியில் விஜயகாந்த் பேசியது: கொட்டும் முரசுக்கு வாக்களிக்க மறந்துவிடாதீர்கள். வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நல்ல உள்ளம் படைத்தவர். மு.க.ஸ்டாலினை நம்பி மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்து போவார்கள் என்றார்.
   அதைத் தொடர்ந்து திரு.வி.க.நகர், கண்ணதாசன் நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். தென்சென்னையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயவர்தனையும் ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai