சுடச்சுட

  

  சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை... தோல்வி பயத்திலேயே இந்த சோதனை: கனிமொழி பேட்டி

  By DIN  |   Published on : 16th April 2019 11:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanimozhi


  வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று (செவ்வாய்கிழமை) இரவு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த சோதனைக்கு பிறகு கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

  அப்போது பேசிய அவர், 

  "வருமான வரித்துறையினர் சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். சோதனை செய்ய உரிய ஆவணம் இருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டேன். அதுவும் இரவு நேரத்தில் சோதனை நடத்த அனுமதி உள்ளதா என்று கேள்வி கேட்டேன். ஆனால், அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை. எனினும், இங்கு உள்ளவர்கள் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்தோம். 

  சோதனைக்கு பிறகு கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு சம்மன் வழங்கினார்கள். ஆனால், இது சட்டத்திற்கு புறம்பானது என்று நினைக்கிறேன்.  

  யாரை விசாரிக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு வேட்பாளர் என்று இரண்டு முறை பதில் அளித்தார்கள்.  

  இதன்மூலம், எதிர்க்கட்சியினரை சோதனை செய்ய வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சோதனைக்கு பிறகு எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டார்கள். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து அவர்கள் இங்கிருந்து சென்றிருக்கிறார்கள். 

  பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழிசை வீட்டில் கோடிக்கோடியாக பணம் உள்ளது, சோதனையிட தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதையே தான் நானும் கேட்கிறேன். தேனியில் நடப்பதை நாம் வாட்ஸ் அப்பில் பார்த்தோம். 

  எங்களை அச்சுறுத்துவதாக நினைத்து அவர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்கள், அனிதா ராதாகிருஷ்ணன் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டார்கள். எந்தவித அடிப்படையும் இல்லாமல் சோதனை செய்கிறார்கள்.    

  வேலூரில் நியாயமற்ற முறையில் தேர்தலை நிறுத்தியிருக்கிறார்கள். அதேபோல் இங்கும் தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த நினைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக அஞ்சாது. இதை எதிர்த்து நிற்போம். 

  வருமான வரித்துறையினரை கூட்டணியில் இணைத்துள்ளார்கள். வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்" என்றார். 

  இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

  "சோதனை நடத்துவது குறித்து அவர்கள் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை. எந்த புகார் என்பது குறித்தும் எனக்கு விளக்கமளிக்கவில்லை.  வேண்டும் என்றே திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை இதுபோன்ற சோதனையின் மூலம் பயமுறுத்த முடியும் நினைக்கிறார்கள். தோல்வி பயத்தால் தான் இதை செய்திருக்கிறார்கள். 

  ஆனால், திமுகவினர் இதற்கு பிறகு தான் உத்வேகத்தோடு பணியாற்றுவார்கள். எதை எதையோ எல்லாம் சந்தித்து வந்திருக்கும் எஃகு மரம் தான் திமுக. அதனால், திமுகவினர் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai