சுடச்சுட

  

  தேர்தல் பணப்பட்டுவாடா: ஆண்டிப்பட்டியில் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

  By DIN  |   Published on : 16th April 2019 10:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ShotDead_gun2_


  ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்த 18 தொகுதிகளில் ஆண்டிப்பட்டி தொகுதியும் இடம்பெற்றுள்ளது. 

  இதையடுத்து, தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. ஆனால், அதன்பிறகு தமிழகத்தில் அடுத்தடுத்து முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 

  முதலாவதாக பணப்பட்டுவாடா விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.     

  இந்த வரிசையில் மூன்றாவது முக்கியச் செய்தியாக ஆண்டிப்பட்டியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிகிறது. அதனால், சோதனை நடத்துவதற்காக போலீஸார் அமமுக அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், போலீஸார் தற்காப்பு காரணமாக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

  இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எனினும், வானத்தை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தியதால் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai