சுடச்சுட

  

  நோட்டாவுக்கு வேண்டாம், நோட்டுக்கும் வேண்டாம்: கமல்ஹாசன்

  By DIN  |   Published on : 16th April 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamal

  நோட்டாவுக்கு மட்டுமல்ல, நோட்டுக்காகவும் வாக்களிக்க வேண்டாம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
   திருச்சி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வி. ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து கமல்ஹாசன் மேலும் பேசியது:
   அரசியலில் இருக்கும் ஆபத்தையும், அசிங்கத்தையும் கண்டு ஒதுங்கியிருந்ததால் நதிக்கரையையும் இழந்துவிட்டோம். நாகரிகத்தையும் இழந்துவிட்டோம். அனைத்து மாவட்டங்களிலும் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது. அரசுகள் அதன் மீது அக்கறை கொள்ளவில்லை. கழிவுநீர்ச் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு அக்கறை காட்டுவதைவிட, தங்களுக்குத் தேவையானவற்றை சுருட்டிக் கொள்வதிலேயே அக்கறை காட்டி வருகின்றன. சாராய வியாபாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கல்வியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டன. அரசுப் பள்ளிகளை மீட்டு, கல்வியை உலகத்தரத்துக்குத் தருவதே மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப் பணியாகும்.
   இதேபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்தான் என அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. திருச்சியின் குரலை, ஸ்ரீரங்கத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏழ்மையாக வைத்திருந்து, தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்வதை கழகங்கள் சரியாக கையாண்டு வந்துள்ளன. மக்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பெரும்பகுதி பணத்திலிருந்து சில்லறையை மட்டுமே தேர்தல் நேரத்தில் வீசி எறிகின்றனர்.
   கழகங்கள் மீதான வெறுப்பில் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம். நோட்டுக்காகவும் வாக்களிக்க வேண்டாம். வாக்குரிமையை ஆயுதமாகப் பயன்படுத்துங்கள். நல்லவர்களுக்கும், நல்ல எதிர்காலத்துக்கும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஸ்ரீரங்கம் கோயிலும் திருப்பதியைப்போல வருமானம் ஈட்டும். தமிழகத்தை கழிவுகளின் குப்பைக் கிடங்காகவும், கொல்லைப்புறமாகவும் மாற்றி வைத்திருப்பதை மீட்க வேண்டியது நமது கடமை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இனி தலைநகரத்தின் தலைவாசலாகவும் இருக்க வேண்டும். மக்கள்
   நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சரிவர இயங்காவிட்டால் அவர்களை நீக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்றார் கமல்ஹாசன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai