சுடச்சுட

  
  pdygov


  நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் துறை முழு முயற்சி எடுத்து வருகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 13 போலீஸ் படைகள், துணை ராணுவத்தினருடன் இணைந்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

  தேர்தலில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 79 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 499 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெடி உற்பத்தி நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  புதுச்சேரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டதாக ரூ. 3,31,37,105 ரொக்கமும், ரூ. 6,40,06,092 மதிப்பிலான பொருள்களும் என மொத்தம் ரூ. 9.71 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

  புதுச்சேரி மாவட்டத்தில் 95 சதவீதம் பேருக்கு வாக்காளர் சீட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் வாக்காளர் சீட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

  இந்நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலை நியாயமாக நடத்தும் வகையிலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 19 ஆம் தேதி காலை 6 மணி வரை 60 மணி நேரத்துக்கு புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

  இந்த தடைக்காலத்தின் போது, 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், ஆயுதங்கள். பேனர்கள் எடுத்துச் செல்வதற்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai