வேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை: ஸ்டாலின் கருத்து 

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை: ஸ்டாலின் கருத்து 

திருச்சி: வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பெருமளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.

குறிப்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களின் இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து அத்தொகுதியில் தேர்தல்  ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக அதிக அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் காரணமாக வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் செவ்வாய் இரவு அறிவித்துள்ளது

இந்நிலையில் வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள தேர்தலுக்கான பரப்புரை செவ்வாய் மாலை 6 மணியோடு நிறைவு பெற்ற நிலையில், திருவாரூரில் தனது பரப்புரையை முடித்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் வேலூர் தேர்தல் ரத்து குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை.

இது திமுகவுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி.

தேனியில் ஓபிஎஸ் மகன் பணப்பட்டுவாடா செய்கிறார்; அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 

தற்போது கனிமொழி வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் தமிழிசை தங்கியுள்ள வீட்டில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது,. அங்கு ஏன் சோதனைகள் நடைபெறவில்லை?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகளை மோடி திமுகவுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார். 

பணப்பட்டுவாடா தொடர்பான எங்களின் புகார்கள்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை.  

இனி வரும் காலங்களில் தேர்தல் ஆணையம் என்பதும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com