Enable Javscript for better performance
வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு அளியுங்கள்: வாக்காளர்களுக்கு   ஸ்டாலின் கடிதம்- Dinamani

சுடச்சுட

  

  வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு அளியுங்கள்: வாக்காளர்களுக்கு   ஸ்டாலின் கடிதம் 

  By DIN  |   Published on : 16th April 2019 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin1

   

  சென்னை: வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று தமிழக வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  செவ்வாயன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து உங்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது நீங்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன. அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன்தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.

  பொதுக்கூட்டங்களுக்கு திரண்ட மக்கள் கடல், வாகனப் பிரச்சாரத்தில் கண்ட மக்கள் வெள்ளம், நடந்துசென்று வாக்கு சேகரித்தபோது வெளிப்பட்ட அன்பு அலை என எல்லாவற்றிலும் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கும்-மாநில அடிமை அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிரான உணர்வு உறுதியாகத் தெரிந்தது. யாரை எதிர்க்கிறோம் என்பதைத் தங்கள் உணர்வாலும் குரலாலும் சந்தேகத்திற்குத் துளியும் இடமின்றி வெளிப்படுத்திய மக்கள், யாரை ஆதரிக்கிறோம் என்பதையும் தெளிவாகத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியே இருக்கிறார்கள்.

  மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது பொதுமக்களாகிய உங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டாண்டுகளாக மக்களைப் பல வகையிலும் வாட்டி வதைத்த மத்திய-மாநில ஆட்சியாளர்களின் செயல்களுக்கு எதிராக ஓரணியாக நின்று போராட்டக் களம் கண்ட - பொதுமேடைகளில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக வாக்கு கேட்டு வருகிறது என்பதை அறிவீர்கள். உங்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், எப்போதும் உங்களுடனேயே இருந்தவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது முழுமையான ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

  மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சிலரும் அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத-விலைபோன – பணபேர - சுயநலக் கூட்டணி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அதில் ஒரு கட்சி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்கிறது. இன்னொரு கட்சியின் அமைச்சர் நீட் தேர்வு நீடிக்கும் என்கிறார். எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தபிறகும் அதனை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர். மக்கள் எதிர்க்கும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என அதே மேடையிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் உறுதி காட்டத் துணிவில்லை.  எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பா.ம..க. சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் பெரிய அய்யா அதே மேடையில் இருந்தும் வாய் திறக்க வாய்மையில்லை. இதுதான் ஜனநாயகக் கூட்டணிக்கும் பணபேரக் கூட்டணிக்கும் உள்ள வேறுபாடு.

  கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்துதான் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது. இப்போது இன்னும் பல மடங்கு செலவு செய்வார்கள். ஏனென்றால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கள் தலைவர் மகனின் நிறுவனத்துக்கும், தங்களுக்கு சகலமுமாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க மத்திய ஆட்சியாளர்களும்,, கலெக்ஷன்-கரப்ஷன் –கமிஷன் என்பதையே தாரக மந்திரமாகக் கொண்ட மாநில ஆட்சியாளர்களும் ஊழல் பணத்தை வைத்து மக்களெனப்படும் மகேசர்களையே விலைக்கு வாங்கிடக் களமிறங்கியிருக்கிறார்கள்.

  அவர்கள் எத்தனை மடங்கு பணத்தை இறைத்தாலும், அதைவிட பல மடங்கு எதிர்ப்பலை ஆட்சியாளர்களை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைக்கிறது.

  மாநிலத்தில் நம் ஆட்சி- மத்தியில் நாம் ‘கை’ காட்டும் ஆட்சி என்ற தீர்ப்பு, மே 23ல் வெளியாகட்டும். தமிழ் மாநில நலன் பேணும் அந்த அரிய வாய்ப்பை வழங்கிட வேண்டுமென, உங்களில் ஒருவனாக - கலைஞரின் மகனாக - உழைப்பதைத் தவிர வேறெதையும் அறியாதவனாக - உடன்பிறப்புகள் அனைவரையும், வாக்காளர்களான   பொதுமக்களையும், பாதமலர் தொட்டு வணங்கி, பணிவன்புடன் வேண்டுகிறேன்! வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு நல்வாய்ப்பு தாருங்கள்!

  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai