அரசு ஒப்பந்ததாரர், நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளில் சோதனை: ரூ.112 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின

அரசு ஒப்பந்ததாரர், நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.112 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.

அரசு ஒப்பந்ததாரர், நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.112 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
 இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான நாமக்கல் மாவட்டம், நடுக்கோம்பை பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.கே. பெரியசாமி, ஒரு அரசியல் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமானவரித் துறையினர் அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 13-ஆம் தேதி சோதனை செய்தனர்.
 மேலும், பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக்குமார் ஆகியோரின் சென்னை வீடுகள், அலுவலகங்கள், அவர்களது நிறுவனம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. சென்னையில் 13 இடங்கள், நாமக்கல்லில் 4 இடங்கள், திருநெல்வேலியில் ஒரு இடம் என மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்றது.
 இந்தச் சோதனையில் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் ரூ.14.54 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல சுஜய் ரெட்டியிடமிருந்து கணக்கில் வராத ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 ரூ.112 கோடி சொத்து ஆவணங்கள்: மூன்று நாள்களாக நடைபெற்ற இச்சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
 சோதனையின் முடிவில் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.112 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
 இது தொடர்பாக பெரியசாமி, அவரது மகன்கள் அருண்குமார், அசோக்குமார் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பி விரைவில் விசாரணை நடத்தவும் வருமானவரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
 சீல் உடைப்பு: காவல்துறையில் புகார்
 வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் புரசைவாக்கம் கிளமெண்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் வெள்ளிக்கிழமை முதல் இரு நாள்களாகச் சோதனை நடத்தி வந்தனர்.
 சோதனைக்கு பின்னர் சனிக்கிழமை இரவு அந்த அலுவலகத்தைப் பூட்டி, வருமானவரித் துறையினர் சீல் வைத்தனர். மீண்டும் அங்கு சோதனை நடத்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீலை உடைத்து, அங்கிருந்த கணினி ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 அந்த ஹார்டு டிஸ்க்கில் முக்கிய ஆவணங்களைப் பற்றிய தகவல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com