ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடர்வோம்: துணை முதல்வர் அறிவிப்பு

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடர்வோம்: துணை முதல்வர் அறிவிப்பு

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 தேனியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு ஜெயலலிதா ஆட்சியின்போது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. தற்போது மேக்கேதாட்டு அணை கட்டும் பணி நடைபெறவில்லை.
 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் ஆட்சியின்போது மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். என்ன சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மக்களிடத்தில் சொல்லி ஆதரவு கேட்க வேண்டும்.
 தேர்தல் பிரசாரத்தில் தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. ஆனால், தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மணல் அனுப்புகிறார் என்ற பொய்யை சொல்லியிருக்கிறார். இது குறித்து அவர் மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருக்கிறோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்.
 தேனி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை இல்லை. தொகுதிக்கு புதியவரான காங்கிரஸ் வேட்பாளருக்கு இது தெரியாது. எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்த கருத்துதான் அதிமுகவின் நிலைப்பாடு. கர்நாடகாவில் மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?.
 திமுக- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். காவிரி நதிநீர் பிரச்னையில் கடந்த 2007-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உறுதிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக வலியுறுத்தவில்லை. 2011-இல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றதும், உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, 2013-இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார். காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் தமிழக மக்களின் நலனுக்கு எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
 தகுதியும், திறமையும் இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் மக்கள் செல்வாக்கை பெற்றால் அரசியலில் நீடித்து நிற்பார்கள். நீட் தேர்வு குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடரும். சேது சமுத்திர திட்டம் சாத்தியமற்றது என்றும், இத்திட்டம் தோல்வியில்தான் முடியும் என்றும் ஜெயலலிதா கூறினார். அதே போல தற்போது இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள ரூ.40 ஆயிரம் கோடி வீணாகியுள்ளது. இடைத் தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றார்.
 பேட்டியின்போது அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com