கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத பழனிசாமிக்கா உங்கள் ஓட்டு: மு.க. ஸ்டாலின் கேள்வி

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்கலாமா என கூட்டத்தினரை பார்த்து கேட்ட ஸ்டாலின்,
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத பழனிசாமிக்கா உங்கள் ஓட்டு: மு.க. ஸ்டாலின் கேள்வி


நாகப்பட்டினம்: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்கலாமா என கூட்டத்தினரை பார்த்து கேட்ட ஸ்டாலின், சர்வாதிகாரியான மோடியின் ஆட்சியும், உதவாக்கரையான எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் அகற்றப்படவேண்டும் என்றார். 

 17-ஆவது மக்களவைத் தேர்தலானது, ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்துடன், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 20-ஆம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதேபோல் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை திருவாரூரில் முடிக்கிறார்.

 முன்னதாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் காலை 8.30-க்கு பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆளும் சர்வாதிகாரி மோடியின் ஆட்சியும், மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

பிரசாரத்தின்போது வார்த்தைக்கு வார்த்தை நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தவித்த போது உடனடியாக ஓடோடி வராமல் ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் இருந்தவாறே பார்த்துவிட்டு சென்றார்.

புயல் பாதித்த பகுதிகளை புயலடித்த மறுநாளே வந்து பார்த்தவன் நான்தான். விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்துபோன்றவை மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம். தமிழுக்கு செம்மொழி தகுதியை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி. 

அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா சமாதிக்கு அருகில் இடம்தர மறுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. காவிரி டெல்டா பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது, மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 

மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதற்கு பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். 

நீர்முளை, நாகப்பட்டினம், கீழ்வேளூர் என பிரசாரம் மேற்கொள்ளும் அவர் இறுதியாக திருவாரூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com