காங்கிரஸ்- திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: கரூர் ஆட்சியர் புகார்

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. 
காங்கிரஸ்- திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: கரூர் ஆட்சியர் புகார்


கரூர்: தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அன்பழகன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில், தங்களுக்கு இறுதிகட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி கரூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதி கேட்டனர். இந்த விவகாரம் நேற்று தீவிரமடைந்த நிலையில், இன்று காலை கரூர் ஆட்சியர் அன்பழகன் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.

அவர் கூறுகையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று இரவு என் வீட்டுக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். கட்டுப்பாட்டை மீறி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். உடனடியாக நான் காவல்துறைக்கு புகார்  அளித்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனது வீட்டுக்கு விரைந்து வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் பாதுகாத்தனர். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com