தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு அனுமதி; மற்ற வகுப்புகளுக்கு தடா: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மட்டும் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு அனுமதி; மற்ற வகுப்புகளுக்கு தடா: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை


தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மட்டும் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் வேறு எந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை கோரி கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த மனு:
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும், அதை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், மாணவர்களுக்கு நீட், ஐஐடி உள்ளிட்ட தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும்.

இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு ஒரே பாடத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் நடைபெறும். அதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.

எனவே, கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகல்வித் துறை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செவ்வாய்க்கிழமை (ஏப்.16) ஒத்திவைத்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை மட்டும் நடத்த அனுமதி அளித்து, பிற சிறப்பு வகுப்புகளுக்குத் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com