தமிழகத்தில் இதுவரை ரூ.133 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ரூ.133 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.133 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ரூ.133 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.132.91 கோடி பறிமுதல் ஆகியுள்ளது. தமிழகத்தில் இந்தத் தொகையே அதிகமாகும். கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ.113 கோடி மட்டுமே பறிமுதல் ஆனது. இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகையில் ரூ.65.01 கோடி திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது.
 ஆபரணங்கள் அடிப்படையில் 998 கிலோ தங்கமும், 642 கிலோ வெள்ளியும் பறிமுதல் ஆகியுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.268 கோடியாகும். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் 19 ஆயிரத்து 655 பறிமுதல் ஆகியுள்ளன.
 எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சோதனை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டதால் அதுகுறித்த தகவல்கள் ஏதும் தேர்தல் துறைக்குக் கிடைக்கப் பெறவில்லை.
 வழக்குகள் பதிவு: வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது, அனுமதியின்றி விளம்பரங்கள் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 4 ஆயிரத்து 466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 அவற்றில், வாக்குக்குப் பணம், பரிசுப் பொருள்கள் அளித்தது போன்ற காரணங்களுக்காக 261 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக மீது 68 வழக்குகளும், திமுக மீது 46 வழக்குகளும், அமமுக மீது 55 வழக்குகளும், பாஜக மீது 15-ம், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 தபால் வாக்குகள்: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், ஊழியர்களுக்கு தபால் வாக்குகளும், தேர்தல் பணிச் சான்றும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 4.22 லட்சம் தபால் வாக்குகளும், தேர்தல் பணிச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 473 வாக்குகள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.
 மீதமுள்ள வாக்குகள் தபால் மூலமோ அல்லது வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்திலோ அளிக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com