தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: 18-இல் வாக்குப் பதிவு

தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: 18-இல் வாக்குப் பதிவு

தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. வரும் 18-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
 மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரம் காட்டினர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.
 ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அனல் பறக்க நடைபெற்ற பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
 கட்டுப்பாடுகளை விதித்தது தேர்தல் ஆணையம்: இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் தொடர்பான எந்த பிரசார காட்சிகளையும் ஊடகங்களின் வாயிலாக வெளியிடக் கூடாது. குறுஞ்செய்தி, இணையதளம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் அதில் அடங்கும்.
 2 ஆண்டுகள் சிறை -அபராதம்: வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளையோ, இதர கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் மூலமாகவோ பிரசாரம் செய்யக் கூடாது. இந்த விதிகளை மீறினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம், இவையிரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
 தொகுதிக்குத் தொடர்பில்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அந்தந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
 திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்கள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
 வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு எந்த வேட்பாளரும் அனுமதி தரக்கூடாது.
 செல்லிடப்பேசிக்கு தடை: தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 67 ஆயிரம் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 வரும் 18-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள்ளாக செல்லிடப்பேசியைக் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 வாக்குச் சாவடிக்குள் செல்ஃபி போன்ற புகைப்படங்கள் எதையும் வாக்காளர்கள் எடுக்கக் கூடாது.
 பிரசார அலுவலகம்: இரண்டு நபர்களைக் கொண்ட வேட்பாளர்களின் தற்காலிக அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். அதேசமயம், அங்கு தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
 வாக்குப் பதிவு முடியும் வரை
 4 தொகுதிகளில் பிரசாரம் கூடாது

மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதன்பிறகு, தமிழகம் முழுவதும் எந்த இடத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. மே 19-ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்
 குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை, வரும் 18-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகே மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com