சுடச்சுட

  

  காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்க ராகுல் முயற்சி: முதல்வர் புகார்

  By  ஓமலூர்,  |   Published on : 17th April 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மேக்கேதாட்டில் அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் கூறியிருப்பதன் மூலம், காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறிக்க முயன்றுள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
   தமிழகத்தில், 17-ஆவது மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்ற இறுதிகட்டப் பிரசாரத்தில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அவர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்பட்டு, மேக்கேதாட்டில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
   இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலின் இதுவரை பதில் கூறவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டப்படும் என்று கூறியதன் மூலம் தமிழகத்தில் விவசாயத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள். காவிரி பிரச்னையில் 50 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்காது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு எனப் போராடிப் பெற்ற உரிமையை ராகுல் காந்தி குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்.
   டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி கொடுத்தது, ஊழல் செய்தது, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது, 2 ஜி ஊழல் என அடுக்கடுக்காக விமர்சனம் செய்த வைகோ, தற்போது ஸ்டாலினையும், ராகுல் காந்தியையும் ஆதரித்துப் பேசுவது கொள்கை இல்லாத சந்தர்ப்பவாதம். இதேபோன்று சுயநலவாதிகள் நிறைந்த கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.
   பச்சைப் பொய்: முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணத்துக்குப் பிறகு, அவருடைய உடல் அடக்கம் செய்ய 6 அடி நிலம் கேட்டு கையைப் பிடித்து கெஞ்சியதாக ஸ்டாலின் பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார். இது பச்சைப் பொய். இதுகுறித்து மக்களிடம் எடுத்துக் கூறவேண்டியது எனது கடமை. சம்பந்தப்பட்ட இடத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் உள்ளன. இந்நிலையில், பலர் மெரீனா கடற்கரையில் தலைவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தனர். பிரச்னைக்குரிய இடத்தை ஸ்டாலின் கேட்டதால், நிலைமையை எடுத்துக் கூறி, அந்த இடத்தைத் தர முடியாது என்று தெரிவித்ததுடன், அதற்கு மாற்றாக, கிண்டியில் 2 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தோம். சட்டரீதியாகப் பிரச்னை இருந்ததால், இடத்தை வழங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் சொன்ன இடத்தை ஏற்காமல் திமுக நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டது. ஸ்டாலின் சொன்னதால் பொதுநல வழக்கு போட்ட அனைவரும் உடனடியாக வாபஸ் பெற்று விட்டனர். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என ஸ்டாலின் செய்த சூழ்ச்சி இதன்மூலம் தெரிய வந்தது.
   ஸ்டாலினுக்கு தலைவருக்குரிய தகுதி இல்லை. தலைவர்களுக்கு அடுத்தவர்களை மதிக்கத் தெரியவேண்டும். அதிமுக தொண்டராக எப்படி இருந்தேனோ, முதல்வரான பின்னரும் நான் அப்படியேதான் உள்ளேன் என்றார் பழனிசாமி.
   சேலம் கடை வீதியில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்
  சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாநகரில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.
   தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்வடைந்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
   சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் பட்டை கோயில், சின்னக் கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.
   இப் பகுதியில் கடை கடையாகச் சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். முதன்முறையாக, சேலம் மக்களவைத் தொகுதியில் நடந்து சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர் வாக்குச் சேகரித்தது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai