சுடச்சுட

  

  தமிழகமெங்கும் பெருக்கெடுக்கும் ஆதரவு: அதிமுக நம்பிக்கை

  By DIN  |   Published on : 17th April 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகமெங்கும் அதிமுகவுக்கான ஆதரவு பெருக்கெடுத்து ஓடுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
   மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
   இந்த நிலையில், அதிமுகவினருக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் இணைந்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கடிதம்:
   தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மாநிலத்தில் நல்லாட்சி தொடர்வதற்கும், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியின் ஆட்சி தொடரவும் வாய்ப்புத் தாருங்கள் என மக்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டோம்.
   ஆதரவு பெருக்கெடுக்கிறது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகளைத் தூர்வாரியது, மின்வெட்டைப் போக்கியது, பிளாஸ்டிக்கை ஒழித்தது என ஏழை, எளிய நடுத்தர மக்களைக் காக்கும் பொறுப்புணர்வுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
   ஒரு நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்து நாட்டின் பிற மாநிலங்களும் நம்மையே பின்பற்றும் அளவுக்கு அதிமுக அரசு கொண்டு வரும் சாதனைகளை தமிழக மக்கள் உளமாற போற்றுகிறார்கள்.
   தமிழகத்தில் நாம் அமைத்திருக்கும் மெகா கூட்டணிக்கே வாக்களிக்க ஒட்டுமொத்த தமிழகமும் உறுதி கொண்டிருக்கிறது.
   அதே வேளையில், சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு மக்களை திசை திருப்புவதில் தீவிரமாக உள்ள எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.
   வாக்குச்சாவடிகளில் கவனம்:
   வாக்குப் பதிவு நடைபெறும் இடங்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை. வாக்குச்சாவடிகளில் நம் முகவர்கள் வாக்குப் பதிவை கண்காணிப்பதுடன், வாக்குச் சாவடிக்கு வரும் மக்களிடம் பண்போடும், பாசத்தோடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரிக்கை விடுக்க வேண்டும்.
   வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களும், கட்சி நிர்வாகிகளும் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்து கடமை ஆற்ற வேண்டும்.
   கட்சித் தொண்டர்கள் அனைவரும் கடமையில் உச்சகட்ட விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai