சுடச்சுட

  
  chandrababu

  விவிபாட் எனும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு கருவியின் ஒப்புகைச் சீட்டுகளில் 50 சதவீதத்தை எண்ணி முடித்த பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
   ஆந்திரத்தில் தேர்தல் முடிவடைந்து, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு அண்ணா அறிவாலயத்துக்குச் செவ்வாய்க்கிழமை வந்தார். திமுக வேட்பாளர்கள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), கலாநிதி வீராசாமி (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்து பேசினார்.
   இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தெலுங்கு - தமிழ் மக்களின் உறவு என்பது அண்ணன் - தம்பி உறவு. சென்னை மாகாணத்தில் தெலுங்கு, தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். தமிழகத்தில் இப்போது ஆட்சி செய்வது அதிமுக அல்ல. மோடி அதிமுகதான். அதிமுகவுக்கு ஒரு வாக்குச் செலுத்தினாலும், அது மோடிக்குப் போடுவதற்குச் சமம்.
   விவசாயிகள் 100 நாள்கள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைப் பற்றி மோடி கவலைப்படவில்லை. மக்களுக்கு கஷ்டங்கள் வந்த போதெல்லாம் பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி போன்ற தலைவர்கள் ஆதரவாக இருந்துள்ளனர். இதை மோடி கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் போற்றும் தலைவர் கருணாநிதி. அந்தத் தலைவரின் வாரிசாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க மக்கள் நினைக்கின்றனர்.
   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: உலகில் உள்ள 191 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வந்தன. அதிலும், தற்போது 10 நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டன.
   ஆந்திரத்தில் தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 13 மாவட்டங்களில் சரியாக இயங்கவில்லை. 729 வாக்குச்சாவடிகளில் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், தான் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவிபாட் எனும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவியின் ஒப்புகைச் சீட்டுகளில் 50 சதவீதத்தை எண்ணி முடித்த பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 23 கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.
   50 சதவீத சீட்டுகளை எண்ணினால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு 6 நாள்களாக ஆகும் என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், எங்களைப் பொருத்தவரை 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்வோம். வாக்களிக்கும்போது விவிபாட் கருவியில் கட்சியின் சின்னம் 7 விநாடிகள் தெரியும் வகையில் இருந்தது. இதை மூன்று வினாடிகளாகக் குறைத்துள்ளனர். தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
   5 ஆண்டு காலமாக பாஜக ஆட்சி சர்வாதிகார ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. ஒரு நபர், ஒரு கட்சி, ஒரு அரசு என்று மோடி தன்னை மையப்படுத்தியே ஆட்சி நடத்தியுள்ளார். எனவே, மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். மத்தியில் ஆட்சியை உருவாக்குவதில் திமுக பெரும் பங்கு வகிக்கும் என்றார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai