தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.
 தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறிஞ்சிநகர் 7-ஆவது தெருவில் ஒரு வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் கனிமொழியின் உதவியாளர்கள் தங்கியுள்ளனர்.
 இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்ற நிலையில், இரவு 8.30 மணியளவில் வருமானவரித் துறை அதிகாரி கார்த்திகா தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் கனிமொழி தங்கியுள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 6 பேரும் வந்திருந்தனர்.
 அப்போது, கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். கனிமொழி, அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்களை வருமான வரித் துறையினர் வெளியே அனுப்பிவிட்டு சோதனையைத் தொடர்ந்தனர். இந்தச் சோதனை இரவு 10.30 மணி வரை நீடித்தது. அதன்பிறகு வருமான வரித் துறை அலுவலர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
 இந்த சோதனை குறித்து தகவலறிந்து திமுகவினர் அங்கு குவியத் தொடங்கினர். மத்திய பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வேலூரைப் போல தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர். திமுகவினரை குறிவைத்து இச்சோதனை நடத்தப்படுகிறது. ஆளுங்கட்சியினர் வீடுகளில் இதுபோன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தாதது ஏன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com