பி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வை எப்போது தொடங்குவது என்பது குறித்த
பி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது: அமைச்சர் தலைமையில் ஆலோசனை


நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வை எப்போது தொடங்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு முதன்முறையாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், ஓரிரு நாள்களில் கலந்தாய்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம் விடுவிப்பு: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார்.

இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.
இன்று ஆலோசனை: இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. 

இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
2018-19 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தியபோது, அந்தப் பணிகள் ஒப்பந்தம் மூலம் தனியார் மூலமே நடத்தப்பட்டது. முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படவில்லை. எனவே, இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வை நடத்துவதில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு எந்தவிதச் சிரமும் இருக்கப் போவதில்லை. மேலும், ஆன்-லைன் கலந்தாய்வுக்குத் தேவையானப் பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் செய்து முடித்துவிட்டது.

கலந்தாய்வை எப்போது தொடங்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற உள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் ஓரிரு நாளிகளில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆன்-லைன் கலந்தாய்வுக்காக அமைக்கப்படும் உதவி மையங்கள் பெரும்பாலும் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலேயே அமைக்கப்படுகின்றன. எனவே, இதை நிர்வகிப்பதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிரமம் ஏற்படும் என்பதாலேயே, கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சேர்க்கப்பட்டார். இப்போது முழு பொறுப்பும் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com