தனது தலைமகனை சென்னை இழந்திருக்கிறது: பிரபல எழுத்தாளர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் 

தனது தலைமகனை சென்னை இழந்திருக்கிறது என்று பிரபல எழுத்தாளர் முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது தலைமகனை சென்னை இழந்திருக்கிறது: பிரபல எழுத்தாளர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் 

சென்னை: தனது தலைமகனை சென்னை இழந்திருக்கிறது என்று பிரபல எழுத்தாளர் முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த திரு.எஸ்.முத்தையா அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நீள அகலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்கு அளந்து அறிந்த திரு முத்தையா எழுத்தாளராகவும் பத்திரிக்கையாளராகவும் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் மனதைப் பெரிதும்  கவர்ந்தவர். சிவகங்கை மாவட்டம்  பள்ளத்தூரில் பிறந்த இவர்   சென்னையின் கலாச்சார மற்றும் வரலாற்று உண்மைகளை விரல் நுனியில் வைத்திருந்தவர். சென்னையின் வரலாற்று தவல்களை பல பத்திரிக்கைகளில் குறிப்பாக இந்து ஆங்கில பத்திரிகையில் விரிவாக எழுதி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு சென்னை யின் பெருமைகளை எடுத்துரைத்தவர். படிக்கக் கிடைக்காத அரிதான  ஒவ்வொரு ஆவணங்களில் இருந்தும் பல்வேறு தகவல்களை திரட்டி சேகரித்து வைத்து- அவற்றை அனைத்து வாசகர்களிடமும் தன் எழுத்துத்  திறமையால் பகிர்ந்து கொண்டவர். சென்னையைப் பற்றி யாருக்கு தகவல் வேண்டுமானாலும் அவர்கள் உடனே தேடிச் செல்வது திரு முத்தையா அவர்களைத்தான்.  இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் சென்னையைப் பற்றி ஒரு நீண்ட தொடரை எழுதிக் கொண்டிருந்தவர்."மெட்ராஸ் டிஸ்கவர்டு" உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.

திரு முத்தையா அவர்களின் மறைவில் சென்னை தன்னைப் பற்றி தகவல் திரட்டும் ஒரு தலைமகனை இழந்திருக்கிறது. அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com