இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது இரங்கல் மற்றும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்


இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது இரங்கல் மற்றும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடித்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் சுமார் 156 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த கொடூர பயங்கரவாத சம்பவத்துக்கு இந்தியத் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கடுமையான கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முறையே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது இரங்கல் மற்றும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,   

"இயேசுபிரான் மானுடத்தை மீட்க தன்னையே சிலுவையில் பலியாக்கிக்கொண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மகத்தான விழாவான புனித ஈஸ்டர் பெருவிழா நாளில், அவ்விழாவினைக் கொண்டாட இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தி கேட்டு சொல்லொண்ணா வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.
    
பெரும்பாலும் தமிழ் கிறிஸ்தவ பெருமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அப்பாவி பொதுமக்கள் ஆண்டவனை வழிபட கூடியிருக்கும் போது, அவர்களை தாக்கியவர்கள் எத்தனை இரக்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது.  

இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம்.  அவர்தம் குடும்பங்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில், சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல்களுக்கு மீண்டும் எங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com