புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

பொறியியல் துறை மாணவர்கள், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம்  நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா

பொறியியல் துறை மாணவர்கள், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம்  நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கேட்டுக் கொண்டார். 
கோவை, சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி தங்கவேலு முன்னிலை வகித்தார். பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.பிரகாசம் ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 120 பொறியியல் மாணவர்கள், 30 எம்பிஏ மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
படிப்பு முடித்து கல்லூரியை விட்டு வெளியே செல்லும் நீங்கள், இனிமேல் தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள உள்ளீர்கள். உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. பொறியியல் துறையில் மென்மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வெளிநாடுகளில் படிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
பொறியியல் பயின்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுப் பணிகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன. அவற்றைப் பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும். 
திறமையின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும். அதற்கான தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பது வாழ்விலும், சமூகத்திலும் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். எனவே, இன்றைய இளைஞர்கள், விவேகானந்தர் போன்ற மாமனிதர்களை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும். பொறியியல் படித்த மாணவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதோடு, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். 
ரோபோடிக், ஆட்டோமேஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தற்போது புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. பொறியியல் மாணவர்கள் அவற்றின் மீதும் கவனத்தை செலுத்த வேண்டும். 
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டை  அடுத்த  நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.  வேளாண், மருத்துவத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். இளம் விஞ்ஞானிகள், நம் சுற்றுச்சூழலை பாதிக்காத விதமாக தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com