அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேண்டுகோள்  

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேண்டுகோள்  

சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பினால் 290 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் ஏராளமானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் இந்தியர்கள் என வெளிவருகிற செய்திகள் நமது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் மனித வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த மனித வெடிகுண்டு வெடிப்புகளுக்கு பின்னால் தீவிரவாத, பயங்கரவாத இயக்கத்தின் செயலாக இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அமைதியை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த இலங்கையில் மீண்டும் பயங்கரவாத சக்திகள் கைவரிசை காட்டியிருப்பது அண்டை நாடான இந்தியாவில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் இறந்த அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை இயற்கை வளம் கொழிக்கிற மிக அற்புதமான தீவாகும். உலகத்தின் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது வாடிக்கையாகும். கடந்த 2018 இல் ஏறத்தாழ 5 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கை சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2019 இல் இரு மடங்காக கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது பெரும் எண்ணிக்கையில் இருந்து வந்தது. இந்தப் பின்னணியில் தான் இத்தகைய தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இலங்கையின் பாதுகாப்பு மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

புகழ்மிக்க ஒரு நட்சத்திர ஒட்டலில் காலை சிற்றுண்டிக்காக வரிசையில் நின்ற ஒருவர் தனது முதுகில் பொறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அதில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட வெளிநாட்டில் இருந்து வந்த பலர்கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இத்தகைய பயங்கரவாத செயலுக்கு பின்னால் இருக்கிற தீவிரவாதிகள் யார் ? அந்த தீவிரவாதிகளின் நோக்கம் என்ன ? இந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 20 லட்சம் பேர். இதில் 70 சதவீதத்தினர் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். 13 சதவீதத்தினர் இந்துக்கள். 10 சதவீதத்தினர் தமிழ் பேசுகிற முஸ்லீம்கள். 8 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள். இத்தகைய மதரீதியான மக்கள் தொகை கொண்ட இலங்கை நாட்டை பயங்கரவாதிகள் யாருக்கு எதிராக குறி வைத்தார்கள் ?

ஒருகாலத்தில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்த இலங்கை மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிலிருந்து மீண்டு நிம்மதியுடன் வாழ முற்பட்டுள்ள நேரத்தில் மீண்டும் பயங்கரவாத அச்சத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர்.  இந்த தொடர் குண்டு வெடிப்பு தமிழர்களிடையே மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை அரசோடு தங்களது உரிமைகளை பெறுவதற்காக தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தனர். இச்சூழலில் மத பின்னணி கொண்ட இத்தகைய தொடர் குண்டு வெடிப்புகள் தங்களது பேச்சுவார்த்தையை சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகின்றனர். தமிழர்களின் இன உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிற தமிழ் தேசிய அமைப்புகள் இந்த குண்டு வெடிப்பு காரணமாக இலங்கை அரசியல் மதரீதியாக பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியிருக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு இருந்தாலும், அண்டை நாடான இந்தியா இந்த பிரச்சினையை கூர்ந்து கவனித்து தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு நிலவுகிற கள நிலவரத்தை அறியவும், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடையே ஏற்பட்டிருக்கிற அச்சத்தையும், பீதியையும் நேரில் அறிந்து உரிய தீர்வுகளை காண இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு செல்ல வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய, பதற்றமான சூழலில் அண்டை நாடான இந்தியா வெறும் அனுதாப செய்தியை வெளியிடுவதோடு நில்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்கிற சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிற வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com