சிறந்த சூழலியல் தலமாக மாறும் பாகூர் ஏரி!

பறவைகளின் வரத்து அதிகரிப்பால், சிறந்த சூழலியல் தலமாக மாறி வருகிறது புதுவை மாநிலத்தின் பாகூர் ஏரி.
சிறந்த சூழலியல் தலமாக மாறும் பாகூர் ஏரி!

பறவைகளின் வரத்து அதிகரிப்பால், சிறந்த சூழலியல் தலமாக மாறி வருகிறது புதுவை மாநிலத்தின் பாகூர் ஏரி.

புதுச்சேரிக்கு தெற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பாகூர் ஏரி. மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியான இந்த ஏரிக்கு கடம்பேரி, பேரேரி, வாகூர் ஏரி என்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. இதுபற்றி ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன் கல்வெட்டு, சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரி பல்லவர் காலத்தில் பாகூர் பகுதியில் உள்ள காடுகளை அழித்து வெட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் ஏரி வாரியப் பெருமக்கள், ஏரி ஆயத்தை வசூலித்து ஏரியை பராமரித்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. 

புதுவையின் நெற்களஞ்சியமாக விளங்கும் பாகூரின் முக்கிய நீர்நிலையான, 3.6 மீட்டர் உயரமுள்ள இந்த ஏரியில் 193.50 மில்லியன் கனஅடி நீரை தேக்க முடியும். பருவமழைக் காலத்தில் தென்பெண்ணையாற்றில் உள்ள சொர்ணாவூர் அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம்.

பாகூர் ஏரி மூலம் பாகூர், செலியமேடு, குடியிருப்புப்பாளையம் அரங்கனூர், குருவிநத்தம், இருளன்சந்தை, சேலியமேடு, கன்னியக்கோவில், பின்னாசிக்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், ஏரியில் தேங்கியுள்ள நீர், சுற்றி வளர்ந்துள்ள மரங்களின் குளுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு உள்ளூர், வெளிமாநில, வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள் அதிகளவில் இங்கு வருகின்றன.

புதுச்சேரியைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர்களான விக்னேஷ்வரன், சுரேந்தர் பூபாலன் தலைமையிலான குழுவினர், பாகூர் ஏரியில் நிகழாண்டில் எடுத்த பறவைகள் கணக்கெடுப்பின்படி, சீழ்க்கைச் சிறகி 35, சின்ன சீழ்க்கைச் சிறகி 85, குள்ளத்தாரா 22, வெண் புருவ வாத்து 9, தட்டை வாயன் 45, ஊசி வால் வாத்து 197, 16 வாத்து இனங்கள், 200 கவுதாரி, 4 முக்குளிப்பான், 17 செண்பகம், 15 பனை உழவாரன், 2 தாழைக் கோழி, 5 நாமக்கோழி, 15 நீலத்தாழைக் கோழி, 2 வெண்மார்பு கானாங் கோழி, 119 செம்மூக்கு ஆள்காட்டி, 15 தாமரைக்கோழி, 3 மீசை ஆலா, 144 நத்தைக்குத்தி நாரை, 4 பாம்புத்தாரா, 8 சின்ன நீர்க்காகம், 18 சாம்பல் கூழைக்கடா, 30 மஞ்சள் குருகு, ஒரு கருங்குருகு, 3 சாம்பல் நாரை, 11 செந்நாரை, 14 பெரிய கொக்கு/நெடலைக் கொக்கு, 4 நடுவாந்தரக் கொக்கு, 2 சின்ன கொக்கு, ஒரு உண்ணிக் கொக்கு, 121 மடையான், 2 சேற்று பூனைப்பருந்து, 2 செம்பருந்து, 8 வெண் மார்பு மீன்கொத்தி, 33 கருப்பு வெள்ளை, 13 மீன்கொத்தி, 47 பச்சைக்கிளி, 2 இந்திய தோட்டக்கள்ளன், 2 மாம்பழச் சிட்டு, ஒரு பழுப்பு கீச்சான், 4 மாங்குயில், 2 கரிச்சான், 5 அரசவால் ஈப்பிடிப்பான், 10 வால் காக்கை, 101 காகம், 23 அண்டங்காக்கை, 2 சின்ன வானம்பாடி, 2 தகைவிலான், 130 சின்னான்/ கொண்டைக் குருவி, வெண்புருவக் சின்னான், பச்சைக் கதிர்க்குருவி, வேலி கதிர்க்குருவி, தையல் சிட்டு, சாம்பல் கதிர்க்குருவி, கருங்கோட்டுக் கதிர்க்குருவி, தவிட்டுக் குருவி, குண்டுக்கரிச்சன், மைனா, செவ்வலகு பூஞ்சிட்டு, ஊர்த் தேன் சிட்டு, தேன் சிட்டு உள்ளிட்ட 66 பறவை இனங்களும், 2,350-க்கும் மேற்பட்ட பறவைகளும் தென்பட்டன. 

இந்த எண்ணிக்கை கடந்தாண்டைவிட அதிகம்.

ஏரியில் உள்ள நீரிலும், சுற்றுப் பகுதிகளிலும் பறவைகளுக்குத் தேவையான புழு, பூச்சிகள் போன்ற உணவுகளும், தானிய வகைகளும் தாராளமாக கிடைப்பதால் ஆண்டுக்கு ஆண்டு பறவைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. 
வருங்காலங்களில் மழைப் பொழிவும், சாதகமான சூழ்நிலையும் நிலவும் பட்சத்தில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் பறவை ஆராய்ச்சியாளர்கள்.

பாகூர் ஏரி குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான ஏரியாக மட்டுமன்றி, பறவைகளை ஈர்த்து சிறந்த சூழலியல் தலமாகவும் விளங்குகிறது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, ஏரியைச் சுற்றி அதிகளவில் மரங்களை வளர்த்தால் பறவைகளின் வருகை அதிகரிக்கும். புதுவை சுற்றுச்சூழலியலில் சிறந்த இடத்தை வகிக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com