வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் விசாரணை

வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் நுழைந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி மதுரையில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
மதுரை அரசு  மருத்துவக் கல்லூரியில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திங்கள்கிழமை பார்வையிட்ட கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியர் 
மதுரை அரசு  மருத்துவக் கல்லூரியில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திங்கள்கிழமை பார்வையிட்ட கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியர் 

வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் நுழைந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி மதுரையில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. 
பெண் வட்டாட்சியர் சென்றது ஏன்?...: இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை சென்ற  மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி கூடுதல் உதவி தேர்தல் அலுவலரான பெண் வட்டாட்சியர் சம்பூரணம்,   சில ஆவணங்களை நகல் எடுத்துள்ளார். மேலும் மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறையில் 3 மணி நேரம் இருந்ததாகத் தெரிகிறது. 
இதுபற்றி அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில்  சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.நடராஜனிடம் முறையிட்டனர். 
4 பேர் பணியிடை நீக்கம்...:  அரசியல் கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து வட்டாட்சியர் சம்பூரணம், கலால் துறை உதவி இயக்குநர் அலுவலக பதிவுறு எழுத்தர் சீனிவாசன், மாநகராட்சி ஊழியர்கள் ராஜபிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலரான, கலால் துறை உதவி இயக்குநர் குருசந்திரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இப்பிரச்னை குறித்து  உரிய விசாரணை நடத்தவும், தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் எதிர்க் கட்சிகள் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். 
தேர்தல் அதிகாரி விசாரணை: 
தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில்,  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி, மதுரையில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.  வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்ற அவர், மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறை, வாக்குகள் எண்ணும் அறை மற்றும் அங்குள்ள ஆவணங்கள்,  கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். ஆட்சியர் ச. நடராஜன், கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் ஆகியோர் உடன் சென்றனர். 
வேட்பாளர்களிடம் கருத்துக் கேட்பு:  பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம்,  இந்த விவகாரம் தொடர்பான புகார் மற்றும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
வேட்பாளர்கள் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் (அதிமுக),  சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),  கா.டேவிட் அண்ணாதுரை (அமமுக), எம்.அழகர் (மக்கள் நீதி மய்யம்), ஜெ.பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி) மற்றும்  பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
விரைவில் விசாரணை அறிக்கை
  மதுரையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் புகார் மற்றும் கருத்துக்களைக் கேட்ட பிறகு,   கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எம். பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: 
மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை, மிகவும் பாதுகாப்பாக உள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்துக்குப் பிறகு வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 அந்த சம்பவத்துக்கு காரணமாக அதிகாரிகள்,  அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com