மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் திடீர் போராட்டம்

மதுரை மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி 20-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைக் கட்டத்தின் மேல் தளத்தில் இருந்து பொதுமக்கள்
மதுரை மத்திய சிறை வளாகத்தில் கட்டடத்தின் மீது ஏறி செவ்வாய்க்கிழமை கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைவாசிகள்.
மதுரை மத்திய சிறை வளாகத்தில் கட்டடத்தின் மீது ஏறி செவ்வாய்க்கிழமை கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைவாசிகள்.

மதுரை மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி 20-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைக் கட்டத்தின் மேல் தளத்தில் இருந்து பொதுமக்கள் செல்லும் சாலையில் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்ற கைதிகள், குற்றம்சாட்டப்பட்ட விசாரணைக் கைதிகள் என 1300-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை,  தரமான உணவு வழங்கப்படுவதில்லை, கடுமையாகச் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலை வளாகக் கட்டடத்தின் மேல் ஏறி நின்று செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைக் காவலர்கள் அவர்களை கீழே இறக்கும் முயற்சியை மேற்கொண்டதால்  ஆத்திரமடைந்த கைதிகள்,  கட்டடத்தின் மேலே  கிடந்த  கற்களை எடுத்து சிறை வளாகத்துக்கு வெளியே பொதுமக்கள் செல்லும் சாலையில் வீசினர். இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் விரைந்து சென்றனர். இதையடுத்து, சிறைச்சாலை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆயுதப்படை, அதிவிரைவுப் படை போலீஸார்  குவிக்கப்பட்டனர். மேலும் கைதிகள் சிலர், தட்டுகளால் உடலில் கீறிக் கொண்டதில் ரத்தக் காயம் ஏற்பட்டது. கைதிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த சிறைத்துறை டிஐஜி. பழனி, சிறைத்துறை எஸ்பி. ஊர்மிளா ஆகியோர்  சிறைச்சாலைக்குச் சென்று  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கைதிகள், தங்களை சிறைக்கு அனுப்பிய நீதிபதி அல்லது மாவட்ட ஆட்சியர் வந்தால் தான் கீழே இறங்குவோம் என தெரிவித்தனர். இதையடுத்து, மதுரை மேற்கு வட்டாட்சியர் கோபிதாஸ் சிறைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிறைத்துறை டிஐஜி, எஸ்.பி, வட்டாட்சியர் ஆகியோர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விசாரணைக் கைதிகள் போராட்டத்தைக் கைவிட்டு கீழே இறங்கினர். மாலை 3.30க்கு தொடங்கியப் போராட்டம் மாலை 5.30க்கும் முடிவுக்கு வந்தது.
இப்போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல், மத்திய சிறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து  மேற்கு வட்டாட்சியர் கோபிதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: விசாரணைக் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். தற்போது எந்தவித பிரச்னையும் இன்றி சிறை வளாகம் அமைதியாக உள்ளது என்றார்.
முன்னதாக, கட்டடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விசாரணைக் கைதிகள் சாலையில் செய்திச் சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களிடம் கூறியது: சிறைச்சாலையில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, தரமான உணவு வழங்கப்படுவதில்லை, இதுகுறித்து கேள்வி எழுப்பினால் காவலர்கள் கடுமையாக சித்திரவதை செய்வதாகத் தெரிவித்தனர். 

கஞ்சா சோதனையை தடுக்கவே போராட்டம்: சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

மதுரை மத்திய சிறைக்கு விசாரணைக் கைதிகள் கஞ்சா கடத்துவதைத் தடுக்க தீவிர சோதனை நடத்தியதால் போராட்டம் நடந்துள்ளதாக மதுரை சிறை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. 

சிறைவாசிகளின் போராட்டத்தால் மதுரை மத்திய சிறை அருகே குவிக்கப்பட்ட காவல் துறையினர்.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: விசாரணைக் கைதிகள், தண்டனைப் பெற்ற கைதிகள் முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பிறகே சிறைக்குள்அனுமதிக்கப்படுவர். கடந்த சில நாள்களாக சிறையில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், கைதிகள் ஆசனவாயில் மறைத்து கஞ்சாவை கடத்துவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 
இந்த சோதனை நடவடிக்கைகளால் கஞ்சாவைக் கடத்த முடியாத கைதிகள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சக கைதிகளைத் தூண்டிவிட்டு 25 -க்கும் மேற்பட்ட கைதிகள் கட்டடத்தின் மேல் தளத்தில் ஏறி செவ்வாய்க்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா, கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து சிறைத்துறை டிஐஜி பழனி, கைதிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com