வங்கக் கடலில் ஏப். 29-இல் புயல் உருவாக வாய்ப்பு: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (ஏப்.29) புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய
வங்கக் கடலில் ஏப். 29-இல் புயல் உருவாக வாய்ப்பு: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (ஏப்.29) புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: 
இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை (ஏப். 25) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (ஏப். 27) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். தொடர்ந்து, இது மேலும் வலுவடைந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறி திங்கள்கிழமை (ஏப்.29) தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்தப் புயல் உருவானால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் (ஏப்.29) இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்றார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வியாழக்கிழமை (ஏப்.25) முதல் சனிக்கிழமை (ஏப். 27) வரை இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த நாள்களில் இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கோடை மழை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, சங்ககிரியை அடுத்த துர்க் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ., திருவண்ணாமலை, ஒசூரில் தலா 50 மி.மீ., கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, ஆயக்குடி, கொடைக்கானல், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 40 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது. 
அதேபோல், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, மதுரை, தருமபுரி, கரூர், ஈரோடு, சிவகங்கை, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, வேலூரில் தலா 103 டிகிரி வெயிலும், மதுரையில் 102 டிகிரி வெயிலும் செவ்வாய்க்கிழமை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com