
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப் பயண இடங்கள் குறித்த அறிவிப்பை அதிமுக வியாழக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்த விவரம்:- முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் 1-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை சூலூர் தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் இருந்து தொடங்குகிறார். அந்தத் தொகுதிக்கு உட்பட்ட செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரிக்கிறார்.
இதேபோன்று மே 5 ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அந்தத் தொகுதிக்கு உட்பட்ட தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், உள்ளிட்ட இடங்களிலும், மே 6-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரவாகவும் வாக்குகளை சேகரிக்கிறார்.
மே 7-ஆம் தேதியன்று ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெ.மோகனுக்கு ஆதரவாக அந்தத் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூர், தருவைக்குளம், மாப்பிள்ளை ஊரணி, முத்தம்மாள் காலனி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆதரவு திரட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து, மே 11 முதல் 14-ஆம் தேதி வரை திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் வாக்குச் சேகரிப்பில் முதல்வர் பழனிசாமி ஈடுபட இருப்பதாக அதிமுக வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.