கொல்லிமலையில் 20 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கு, ஆனால் குழந்தை?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கொல்லிமலையில் 20 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கு, ஆனால் குழந்தை?


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  விசாரணை நடைபெற்று வருகிறது. 

குழந்தை விற்பனை விவகாரத்தைத் தோண்டிய போது கிடைத்த முதல் துப்பு கொல்லிமலைதான். எனவே தனிப்படையினர் கொல்லிமலையில் நேற்றும் இன்றும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நகராட்சியால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கொல்லிமலைக்கு 20 குழந்தை பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சான்றிதழ்களின் அடிப்படையில் பெற்றோரின் முகவரிகளைத் தேடிய போது அங்கு சான்றிதழ் மட்டுமே இருக்கிறது, குழந்தைகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த குழந்தைகள் அனைத்தும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா? பெற்றோர்களை மூளைச்சலவை செய்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைக்கிடையே, கொல்லிமலையில் குழந்தை விற்பனையில் தொடர்புடைய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக இடைத்தரகர்களாகச் செயல்பட்ட தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்,   ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  


நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்  அமுதா  (எ) அமுதவள்ளி  (50).   இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணியாற்றி, கடந்த 2012-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.  இவரது கணவர் ரவிசந்திரன் (54).  இவர் ராசிபுரம் நகரக் கூட்டுறவு வங்கியின் ஆர்.புதுப்பாளையம் சாலை கிளையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.   இந்த நிலையில்,  அமுதா பல ஆண்டுகளாக குழந்தை  இல்லாதவர்களுக்கு குழந்தைகளை விலைக்கு வாங்கித் தரும் இடைத்தரகராகச் செயல்பட்டு வந்துள்ளார்.   இது குறித்து,  அவர் பேரம் பேசிய ஆடியோ கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்)  மூலம் பரவியதையடுத்து,  நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில்,   மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு,  ராசிபுரம்  டி.எஸ்.பி., ஆர்.விஜயராகவன்,  காவல் துறை ஆய்வாளர்கள் சி.செல்லமுத்து,  விஜயகுமார்,  மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இந்திரா ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதில் செவிலியர்  அமுதா,  சேலம்,   தருமபுரி,  திருச்செங்கோடு, ஓமலூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 - க்கும் மேற்பட்ட குழந்தைகளை வாங்கி விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.  பெரும்பாலும்,  கொல்லிமலை பகுதியில் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.   ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளையும்,   ஆதரவற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் வாங்கி,  குழந்தை இல்லாதவர்களுக்கு இடைத்தரகராக இருந்து பல லட்சம் ரூபாய்களுக்கு  விற்பனை செய்துள்ளார்.   

இது தொடர்பாக இவரது வங்கிக் கணக்கிலும்,  கணவர் ரவிசந்திரனின் வங்கிக் கணக்கிலும் பல லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  குழந்தைகள் விற்பனையில் கொல்லிமலை செங்கரை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன்,   ஈரோடு பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் பர்வீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து  அமுதா,  அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்  முருகேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும்,   குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர், குழந்தைகளை வாங்கிச் சென்ற பெற்றோர்களிடமும் விசாரணை நடத்திட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் ராசிபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

பிறப்புச் சான்றிதழ் குறித்து விசாரணை:  ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை,   தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் ஏதாவது பெற்றோர்களின் பெயர் தவறாக இடம் பெற்றுள்ளதா என்பதை  உறுதிப்படுத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,  நகராட்சி  அலுவலகம்,  ராசிபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தாய் சேய் நல விடுதிகள்,  தனியார் மருத்துவமனைகளில் இக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ராசிபுரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களையும்  ஆய்வு செய்து வருகின்றனர்.  

ஓமலூரில் விசாரணை...
ராசிபுரத்தில்  குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக,  செவிலியர் அமுதாவை, ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து,  சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அழைத்துச் சென்றார்.  சட்ட ரீதியாகத்தான் குழந்தையை விற்றேன் என அவர் கூறியதன் அடிப்படையில்,  சம்பந்தப்பட்ட முகவரியில் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  அங்கிருந்த சில ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியதாகத் தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com