ரயில் நிலையத்தில் செயல்படாத ஸ்கேனர் கருவிகள்: கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

ரயில் நிலையத்தில் செயல்படாத ஸ்கேனர் கருவிகள்: கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

கோவை ரயில் நிலையத்தின் இரு நுழைவு வாயில்களிலும் நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர் கருவிகள் செயல்படாததையடுத்து பயணிகளின் உடமைகள்

கோவை ரயில் நிலையத்தின் இரு நுழைவு வாயில்களிலும் நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர் கருவிகள் செயல்படாததையடுத்து பயணிகளின் உடமைகள் எதுவும் சோதனையிடப்படாமல் அனுமதிக்கப்படுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அடுத்துதடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உளவுத் துறை சார்பில் இலங்கைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தத் தாக்குதலையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் நிலையங்கள் அனைத்திலும் உள்ள ஸ்கேனர் கருவிகளைத் தொடர்ந்து இயக்கவும், பயணிகளின் உடமைகள், சரக்குகள் உள்ளிட்டவற்றை முழுமையாகப் பரிசோதித்த பின்னரே ரயிலில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கும் அதன் கோட்ட மேலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த உத்தரவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் கோவை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் மற்றும் பின்புற நுழைவு வாயிலில் உள்ள ஸ்கேனர் கருவிகள் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. மாறாக, பயணிகளின் உடமைகள் அனைத்தையும் ரயில்வே போலீஸார் கைகளால் சோதனையிடுகின்றனர். அதற்குக் கூட கையடக்க ஸ்கேனர் கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

பயங்ரவாதிகள் ஊடுருவல் இருக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகி ஜமீல் கூறியதாவது, அவசியமான நேரங்களில் ரயில் நிலையங்களில் உள்ள ஸ்கேனர் கருவிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பில் அதிகாரிகள் இப்படி அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதை ஏற்க முடியாது. எனவே ஸ்கேனர் கருவிகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.  

இந்தப் புகார் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதான நுழைவு வாயில் மற்றும் பின்புற நுழைவு வாயிலில் உள்ள ஸ்கேனர் கருவிகள் இரண்டிலும் சிறு பழுது ஏற்பட்டுள்ளன.  இதுகுறித்து கோட்டத் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பழுது சரி பார்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com