Enable Javscript for better performance
முத்தரசன் உரையை முழுமையாக கேட்டுத் தெளிவு பெறுங்கள்: ராமதாசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிவுரை- Dinamani

சுடச்சுட

  

  முத்தரசன் உரையை முழுமையாக கேட்டுத் தெளிவு பெறுங்கள்: ராமதாசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிவுரை 

  By DIN  |   Published on : 28th April 2019 06:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramadoss

   

  சென்னை: முத்தரசன் உரையை முழுமையாக கேட்டுத் தெளிவு பெறுங்கள் என்று பாமக நிறுவனர்  ராமதாசுக்கு இந்திய காமியினிஸ்ட் கட்சி அறிவுரை  கூறியுள்ளது.

  இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு செய்தி ஊடகங்களுக்கு ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளடங்கியுள்ள பொன்பரப்பியில் பட்டியிலின வாக்காளர்களை கடந்த 18.04.2019 நடந்த மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவில் பங்கேற்க விடாமல், சிலர் தடுத்து அவர்களது வாக்குரிமை மறுத்துள்ளனர்.

  மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது கடுமையான குற்றச் செயலாகும்.

  இது தொடர்பாக கடந்த 24.04.2019 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் தலைநகர் சென்னையில் நடைபெற்றது.இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா முத்தரசன் கலந்து கொண்டு பொன்பரப்பியில் பட்டியிலின வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அச்சமின்றி பதிவு செய்யும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

  எந்தவொரு வாக்காளரின் வாக்களிக்கும் உரிமையும் வன்முறை மற்றும் பலாத்கார நடிவடிக்கைகளின் மூலம் மறுக்க அனுமதிக்ககூடாது என்று கூறியுள்ளார்.

  அவரது உரையில் எந்த இடத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், குறிப்பாக 'வன்னியர்' சமூக மக்கள் பகுதியை அச்சுறுத்தும் வகையில் ஒரு வார்த்தையும் பயன்படுத்தவே இல்லை என்பதை அவரது உரையை காணொலியில் முழுமையாக பார்த்து, கவனமாக கேட்பவர்கள் ஏற்பார்கள்.

  சமூக நீதிசார்ந்த ஜனநாயகத்தை கொள்கை நிலையாக முன்னெடுத்துச் செல்லும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு 20 சதவீதம் பெறுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தை ஆக்கப்பூர்வமான செயலாகவே மதிப்பீடு செய்தது என்பதை பெரியவர் மருத்துவர் ச இராமதாசு மறுக்க மாட்டார் என நம்புகிறோம்.

  தோழர் இரா முத்தரசன் அவர்களது வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் 24.04.2019 ஆற்றிய உரை யூ டியூப் காணொலியில் அனைவரும் காண, கேட்க வசதியாக கட்சியின் அதிகாரப்பூர்வ cpi TN State Council என்ற வாட்ஸ் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

  உண்மை நிலை இவ்வாறு இருக்க வெகு சிலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் " வன்னியர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று பேaசினார் என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அப்பட்டமான பொய் செய்தியை,  வன்முறையை தூண்டும் விதத்தில் வதந்'தீ'யை பரப்புரை செய்து வருகின்றனர். மேலும் சிலர் அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆத்திரமூட்டியும், ஆபாசமாகவும் பேசி வருகின்றனர். இந்த அநாகரிக செயலை குறைந்த பட்ச ஜனநாயக உணர்வுள்ளோரும் அனுமதிக்க மாட்டார்கள்.

  ஆனால் தோழர் இரா முத்தரசன் பேசாத ஒரு செய்தி, அவர் பேசியதாக இட்டுக் கட்டி விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பரப்புரை செய்வதும் , அலைபேசியில் அச்சுறுத்தல் செய்வதும் தீய உள் நோக்கம் கொண்ட மிக மோசமான செயலாகும்.

  இந்த இழிசெயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டித்தும், தோழர் இரா முத்தரசன் அலைபேசியில் தரம்தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என 26.04.2019 ஆம் தேதியில் அறிக்கை வெளியிட்டது.

  இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு ச இராமதாசு அவர்கள் 27.04.2019 ஆம் தேதியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், திடீரென ஜெனரல் டயராக மாறி வன்னியர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்து இருக்கிறார் " என்று குறிப்பிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார்.

  மருத்துவர் திரு ச இராமதாசு அவருக்கு கிடைத்த ஆரம்ப கட்ட செய்திக் கொண்டு அறிக்கை தயாரித்திருப்பார் என கருதுகிறோம். அவர் யூ டியூப் சமூக ஊடகத்தில் கிடைக்கும் தோழர் இரா முத்தரசன் உரையை முழுமையாக பொறுமை யுடன் கேட்டு தெளிவு பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai