பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.
TN 10th Result 2019
TN 10th Result 2019


தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது. தேர்வுகள் எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை  12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த  9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.  இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியானது. 

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வர்கள் www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளன.  

இதையடுத்து வரும் மே 2-ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும்,  தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 6-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளலாம்.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்வு எழுதியவர்களில் கடந்த ஆண்டைவிட 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகித்ததில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடம், நாமக்கல் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு 0.07 சதவீதம் அதிகரித்து 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com