சுடச்சுட

  


  மதுரையில் வைகைப் பெருவிழாவையொட்டி பாரதிய பசுவின பாதுகாப்பு மாநாடு மற்றும் 108 கோ பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
  மதுரையில் பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகைப் பெருவிழா கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், ஆதினங்கள் பங்கேற்றுள்ளனர். வைகைப் பெருவிழாவையொட்டி பல்வேறு சிறப்பு மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. 
  இந்நிலையில் வைகைப் பெருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பாரதிய பசுவின பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யக்ஞம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசுக்கள் அழைத்து வரப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜையை திருப்பரங்குன்றம்  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஸ்தானிகர் கே.ராஜா பட்டர் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பாரதிய பசுவின பாதுகாப்பு மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. 
  சேலம் தேஜோமயானந்தா ஆஸ்ரம மடாதிபதி சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி வரவேற்றார். பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். சேலம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜத்தின் தலைவர் யோகினி சிவாம்பா சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாநாட்டில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னர் ராமானுஜ ஜீயர், புதுக்கோட்டை திலகவதியார்  திருவருள் ஆதினகர்த்தா தயானந்த சந்திரசேகர சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினார். 
  இதையடுத்து மாநாட்டில், பாரம்பரிய பசுவினங்களின் அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய வழிபாடுகள் என்ற தலைப்பில் கோவை இடிகரை சாக்தஸ்ரீ நாசர் சுவாமிகள் கருத்துரை வழங்கினார்.
  இதையடுத்து பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில், நாக்பூர் அனு சந்தானி கேந்திரத்தின் நிர்வாகி சுனில்மான் சின்ஹா தலைமை வகித்தார். சென்னை கோவர்த்தன அறக்கட்டளை நிர்வாகி வி.நடேசன், சென்னை கோ ஸம்ரக்ஷ்ண சாலை நிர்வாகி அனந்தராமன், காங்கேயம் கொங்கு கோசாலை சிவக்குமார் வெங்கடாச்சலம் ஆகியோர் கருத்துரை வழங்கினார். 
  இதில் திருவண்ணாமலை ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத் தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ் பங்கேற்று விருதுகள் வழங்கினார். மாநாட்டை சேலம் துரை ரமேஷ்,  பழனி பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
  இதையடுத்து மாலை  6 மணிக்கு வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் துறவிகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் மற்றும் பக்தர்கள்  பங்கேற்றனர். இதையடுத்து மாநாட்டு அரங்கில் சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கதாகலாட்சேபம் மற்றும் பிட்டுக்கு மண் சுமந்த படலம் பண்ணிசை மற்றும் நாட்டியம் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து புலவர் சோ.சொ.மீ.சுந்தரத்தின் சிறப்புரையும் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai