நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக தெரிவிக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி  

மத்திய அரசினால் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக தெரிவிக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி  

சென்னை: மத்திய அரசினால் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தச் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி  பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிடவேண்டும். இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால், அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். நாடாளுமன்றக் குழு பரிந்துரையின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே சொந்த நடைமுறையைப் பின்பற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் நிராகரித்து உத்தரவிட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் பெற்றுக் கொண்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் ராஜிஸ் எஸ்.வைத்யா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்விலிருந்து விலக்களித்து தமிழக அரசு அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்தன. அன்றைய தினமே இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு அனுப்பி வைத்தது.

பின்னர் இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துகள் பெறப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசுத் தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டார். பின்னர் அந்த இரண்டு சட்ட மசோதாக்களும் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதியன்று தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கான ஆவணங்களும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசினால் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ' மத்திய அரசினால் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன்?  என்றும், மசோதா நிராகரிக்கப்பட்டதால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்விகள் எழுப்பியது.

இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை ஆக.13ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com