தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி வழக்கு: ஒரே வாக்கியத்தில் தூக்கு தண்டனையை  உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

கோவையில் 2010ம் ஆண்டு பள்ளியில் பயின்று வந்த சிறார்களான அக்கா, தம்பியைக் கடத்திச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இருவரையும் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறு
தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி வழக்கு: ஒரே வாக்கியத்தில் தூக்கு தண்டனையை  உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

கோவையில் 2010ம் ஆண்டு பள்ளியில் பயின்று வந்த சிறார்களான அக்கா, தம்பியைக் கடத்திச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இருவரையும் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு, சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியதும், குற்றவாளிகளில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பரவலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டதும் பலருக்கும் நினைவிருக்கலாம்.

கோவையில், பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனைகளையும் விதித்தற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சிறுமி மற்றும் அவரது தம்பி ரித்திக்கைக் கடத்திச் சென்ற மனோகரனும், மோகனகிருஷ்ணனும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இரண்டு பேரையும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளில் ஒருவரான மோகனகிருஷ்ணன் காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு உறுதி செய்யப்படுவதாக ஒரே வாக்கியத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதன் மூலம், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்பதையும், இது பிறருக்கும் பாடமாக அமையும் என்பதையும், தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் ஒரே வாக்கியத்தில் தீர்ப்பளித்திருப்பதம் மூலம் தெரிய வந்துள்ளது.

 

சம்பவத்தின் பின்னணி

கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், 2010, அக்டோபர் 29-இல் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி - அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை போலீஸார் 2010, நவம்பர் 9-இல் வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது, கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதால், என்கவுன்ட்டரில் மோகன கிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார். மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1-இல் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014, செப்டம்பர் 20-இல் மேலமுறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் இறுதி விசாரணை 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. மனோகரன் சார்பில் வழக்குரைஞர் பி. வினய் குமாரும், தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கன்னாவும் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com