அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக் கட்டணம் ரத்து: அரசாணை வெளியீடு 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் துறையின் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். 
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதுமுள்ள 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் முழுமையாக தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 
அதாவது, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.200,  9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.250, பிளஸ்1,  பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ரூ.500 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:  ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு வழி ஏற்படுத்தும். 
இதன் மூலம், தேசிய அளவில் ஆங்கில மொழியில்  நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார். 
22,314 மாணவர்களுக்கு: அதனை ஏற்று, 2019-20-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 22,314 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக் கட்டணம் ரூ.67 லட்சம் திரும்ப வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி, நிகழ் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பினருக்கும் ஆங்கில வழிக் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.  
சட்டப்பேரவை அறிவிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்  பிளஸ் 2 வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com