கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தை 8-ஆவது அதிசயமாக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்


கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ. விஜயகுமார் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் கடைசியாகவும், தீபகற்ப முனையாகவும் உள்ள கன்னியாகுமரி வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகியவை சங்கமிக்கும் இடமாகும். 
இது உலகில் எங்கும் இல்லாத ஒரு குறிப்பிடத்தக்க காட்சியாகும். இது திரிவேணி சங்கமம் என குறிப்பிடப்படுகிறது. பிரிந்த பெற்றோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்யும் புனித இடமாகவும் இது திகழ்கிறது. 
கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மூன்று விதமான வண்ணங்கள் உள்ளன. இந்த வண்ணங்களை சிவன், விஷ்ணு, பிரம்மா ஒன்றாக இணைந்து இருப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதைக் காண வருகின்றனர். கன்னியாகுமரி புகழ்பெற்ற புனித தலமாகவும் கடற்கரை புகழிடமாகவும் இருந்து வருகிறது. 
மேலும், சூரிய உதயம், அஸ்தமனம் கன்னியாகுமரியில் புகழ் பெற்றதாகும். ஏழு உலக அதிசயங்களுடன் ஒப்பிடும் தகுதியை கன்னியாகுமரி கொண்டுள்ளது. எனவே, கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com