பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில்  விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் விருப்பப் பாடத்தை இனிமேல் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில்  விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது: சிபிஎஸ்இ அறிவிப்பு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் விருப்பப் பாடத்தை இனிமேல் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விதிப்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகள் 2 ஆண்டு படிப்புகளாகும்.
இந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் முறையே 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் விருப்பப் பாடங்களை தேர்வு செய்து, அந்தப் பாடத்தையே அதற்கு அடுத்து வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தொடர வேண்டும். 
ஆனால், சில மாணவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு மாறியதும், தங்களது விருப்பப் பாடத்தை பல்வேறு காரணங்களுக்காக மாற்ற விரும்புகின்றனர். ஆனால், இனி விருப்பப் பாடத்தை அவ்வாறு மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியது:  மாணவர்கள் அல்லது பெற்றோர் விருப்பத்துக்கு ஏற்ப பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் விருப்பப் பாடத்தை மாற்ற முடியாது. புதிய திருத்தப்பட்ட விதிப்படி பாடப் பிரிவை கட்டாயம் மாற்ற விரும்புபவர்கள் அந்த கல்வியாண்டில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் கோரிக்கை விடுத்தால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். இதற்காக சிபிஎஸ்இ நிலையான செயல் விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. 
வலுவான ஆதாரத்துடன்...: இந்த விதிக்கு உட்பட்டு மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ பாடப் பிரிவை மாற்றுவது ஏன் என்பதற்கான வலுவான ஆதாரத்துடன் பள்ளியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். பாடப் பிரிவை மாற்றுவதற்காக கூறப்பட்டுள்ள காரணம் உண்மையானதுதானா என்பதை தீவிரமாக நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும். 
கோரிக்கை நியாயமாக இருந்தால், அதற்கான பரிந்துரையை சிபிஎஸ்இ மண்டல அலுவலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதை ஆய்வு செய்து அனுமதிக்கப்படும். சிபிஎஸ்இயின் விதிமுறைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்றாவிட்டால் பாடத்தை மாற்ற விரும்பும் மாணவரின் பரிந்துரை நிராகரிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com