மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிகழாண்டில் அதிகபட்சமாக ஜூனில் 24.95 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில்  பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் 24.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: நிகழாண்டில் அதிகபட்சமாக ஜூனில் 24.95 லட்சம் பேர் பயணம்


சென்னை மெட்ரோ ரயில்களில்  பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் 24.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.  கடந்த 2015-இல் மெட்ரோ  ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, ஒரு மாதத்தில் அதிகபட்ச பயணிகள் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும். இதுதவிர, ஜூலை 11-ஆம் தேதி   ஒரே நாளில் 1.07 லட்சம் பேருக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
நெரிசலை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை: சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், ஒரு பகுதி பணிகள் முடிந்து, கோயம்பேடு- ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயிலின் முதல் சேவை கடந்த 2015-ஆம் ஆண்டு  ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி 15,000 முதல் 25,000 பேர் வரை பயணம் செய்தனர். அதன்பிறகு, ஒவ்வொரு பகுதியாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிந்து, சேவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 
இதற்கிடையில், ஏஜி டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தூரத்துக்கான திட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 45 கி.மீ. தொலைவுக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, சென்ட்ரல்-பரங்கிமலை வரையும், விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும் ரயில் சேவை முழுமையாக வழங்கப்பட்டது. இதன்பிறகு, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிலும், வண்ணாரப்பேட்டை-ஏஜி டி.எம்.எஸ். இடையே திட்டப் பணிகள் முடிந்து, ரயில் சேவை தொடங்கியபோது பயணிப்போர் எண்ணிக்கை மாதம்தோறும் 29 சதவீதம் உயர்ந்தது.
24.95 லட்சம் பேர் பயணம்: இந்நிலையில், நிகழாண்டில் ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில்களில்  24.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2015-இல் ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, ஒரு மாதத்தில் அதிகபட்ச பயணிகள் பயணம் மேற்கொண்டது கடந்த ஜூன் மாதத்தில் தான். நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 19.37 லட்சம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 23.62 லட்சம் பேரும்,  மார்ச் மாதத்தில் 23.88 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 24.30 லட்சம் பேரும், மே மாதத்தில் 24.49 லட்சம் பேரும் என்று பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை  ஜூன் மாதத்தில் 24 லட்சத்து 95 ஆயிரத்து 491 பேராக உயர்ந்தது. இதுதவிர, முதன்முறையாக ஒருநாளில் அதிகபடியான  பயணிகள் ஜூலை 12-ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளனர். அன்றைய நாளில் மெட்ரோ ரயில்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 816 பேர் பயணம் செய்தனர். இதற்கு முன்னதாக, ஜூலை 1-ஆம் தேதி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 460 பேர் பயணம் செய்திருந்தனர்.  
பயணிகள் எண்ணிக்கை உயர்வுக்கு சென்னை  விமானநிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணைப்பு பாதை, மெட்ரோ ரயில் சேவை மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய முக்கிய  ரயில்நிலையங்களை எளிதாக அடையும் வசதி, மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 உலகத் தரத்தில் சேவை: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: உலகத் தரத்தில் மக்களுக்கு போக்குவரத்து  சேவையை அளிக்க  மெட்ரோ ரயில்  நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தரமான சேவை, சரியான கட்டணம், குறைந்த நேரம், பயணிகள் பாதுகாப்பு ஆகியவை முக்கிய விஷயமாக உள்ளது. இதன் காரணமாக, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்கிறது. பயணிகள் எண்ணிக்கை பொருத்தவரை,  விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது  தினசரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், திருமங்கலம், ஆலந்தூர், வடபழனி ஆகிய நிலையங்களில் தினசரி தலா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணிக்கின்றனர். 
 முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து,  ரயில்சேவை தொடங்கிபிறகு, சில நாள்கள் இலவச பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் 7.3 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த இலவச பயணத்தின்போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தை  மக்கள் அறிந்து கொண்டனர். இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவருகிறது.  மெட்ரோ ரயில்களின் தினசரி சராசரியாக 88 ஆயிரம் முதல் 98 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட  சில நாள்களில் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர் என்றார் அவர்.
படிப்படியாக உயர்ந்த
பயணிகள் எண்ணிக்கை:
ஆண்டு    பயணிகள் 
2019    எண்ணிக்கை
ஜனவரி    19.37 லட்சம் பேர்
பிப்ரவரி    23.62 லட்சம் பேர் 
மார்ச்    23.88 லட்சம் பேர்
ஏப்ரல்    24.30 லட்சம் பேர்
மே    24.49 லட்சம் பேர்
ஜூன்    24.95 லட்சம் பேர்   
4 கோடியை தாண்டியது: 
கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு ஜூன் வரை 4 .5 கோடிக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 26 லட்சத்து 33 ஆயிரத்து 890 பேர் பயணம் செய்தனர். கடந்த 2016- ஆம் ஆண்டில் 36 லட்சத்து 30 ஆயிரத்து 216 பேரும்,  கடந்த 2017-ஆம் ஆண்டில் 73 லட்சத்து 99 ஆயிரத்து 282 பேரும், 2018-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 43 லட்சத்து 88 ஆயிரத்து 969 பேரும் பயணம் மேற்கொண்டனர். நிகழாண்டில் மே 15 ஆம்தேதி வரை 1 கோடியே 51 ஆயிரத்து 442  பேரும் பயணம் செய்திருந்தனர். இப்போது வரை  மொத்தம் 4.5 கோடிக்கு மேல் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com