ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் புதிய பாலங்கள்: தமிழக அரசு உத்தரவு

ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான உத்தரவை, தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. 


ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான உத்தரவை, தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. 
அதன்படி, நிகழ் நிதியாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள் மற்றும் 100 தரைப் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 1.49 லட்சம் கி.மீ. நீளத்துக்கு கிராமப்புற சாலைகள் உள்ளன. இந்த நிலையில், வெள்ள நீர் உள்ளிட்டவை சாலைப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குக் கடந்து செல்ல சிறு பாலங்கள், தரைப் பாலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போதுள்ள அமைப்புகளில் பெரும்பாலானவை சரிவர இயங்காமலும், சேதம் அடைந்தும் உள்ளன.
எனவே, அவற்றுக்கு மாற்றாக புதிய பாலங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்தப் புதிய அமைப்புகளை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் அளிக்கும் குழுவானது தமிழக அரசின் திட்டத்துக்கு ஒப்புதலும் அளித்துள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு கூலித் தொகையாக ரூ.229 அளிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், தொழிலாளர்களுக்கான கூலித் தொகையை முழுமையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. மேலும், கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களின் செலவில் மத்திய அரசு 75 சதவீதத்தையும், மாநில அரசு 25 சதவீதத்தையும் ஏற்றுக் கொள்கிறது.
இந்தப் பாலப் பணிகளானது மொத்தமாக 146.78 கோடியில் மேற்கொள்ளப்படும். அதாவது, 700 குறு பாலங்களானது ரூ.37.74 கோடி, 250 சிறு பாலங்கள் ரூ.71.88 கோடி, 100 தரைப் பாலங்கள் ரூ.37.16 கோடி என மொத்தம் ரூ.146.78 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தனது உத்தரவில் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com