பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்களில் கண்காணிப்பு கேமரா: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை தெற்கு ரயில்வே நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்களில் கண்காணிப்பு கேமரா: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை தெற்கு ரயில்வே நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. 
திருச்சியைச் சேர்ந்தவர் ரயில்வே காவலர் வினோத். இவர் 2014 -ஆம் ஆண்டு முத்துநகர் விரைவு ரயிலில், கொடை ரோடு முதல் திருச்சி வரை பெண் காவலர் ஒருவருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் தவறாக பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், நடந்த விசாரணையில் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி செய்தார்.  இந்நிலையில், தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வினோத் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
முத்துநகர் விரைவு ரயிலில் பணியில் இருந்த ரயில்வே பெண் காவலர், மது போதையில் இருந்த வினோத் பெண் பயணியிடம் தவறாக பேசியதாகத் தெரிவித்துள்ளார். 
ஓடும் ரயிலில், ரயில்வே காவலர் பெண் பயணிக்கு தொந்தரவு கொடுத்தது பெரிய குற்றம். அந்தக் காவலர் மீது வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் துறைரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஓடும் ரயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். பணி நிமித்தமாக ஏராளமான பெண்கள் தனியாகப் பயணம் செய்யும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமானது. 
பல நாடுகளில் பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துகள், ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற நடைமுறைகளை தெற்கு ரயில்வேயில் அனைத்து ரயில்களிலும் நடைமுறைப்படுத்துவது அவசியமானது.
இதுபோன்ற புகார்கள் எழும் நிலையில், அதனை உறுதி செய்ய கண்காணிப்பு கேமரா காட்சிகள்தான் தேவை. 
இதன் மூலம் தவறு செய்பவர்கள் தப்பித்து விடாமல் அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தரலாம். 
எனவே பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என தெற்கு ரயில்வே நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com