
ஈரானில் புரட்சிகரப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள தமிழரை மீட்டு, நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விவரம்:
ஈரானின் புரட்சிகர படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கித் தவிக்கும் சென்னையைச் சேர்ந்த 27 வயதாகும் ஆதித்யா வாசுதேவன் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட இம்பேரோ என்ற எண்ணெய்க் கப்பல் ஜூலை 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிலிருந்து சவூதி அரேபியாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்மூஸ் என்ற பகுதியில் புரட்சிகரப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் ஆதித்யா வாசுதேவனுடன் 22 கப்பல் பணியாளர்களும் இருந்துள்ளனர். அதில் 18 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கப்பலின் மூன்றாவது அதிகாரியாக ஆதித்யா பணிபுரிந்துள்ளார்.
இதுகுறித்து ஆதித்யாவின் தந்தை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து, அவரை மீட்டு, நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட்டு, ஆதித்யாவையும் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களையும் மீட்டு, நாடு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.