
திருவாரூரில் தேரில் இருந்து விழுந்த சிவாச்சாரியார் முரளி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
திருவாரூர் மாவட்டம், தெற்கு சேத்தி நகரத்தில் உள்ள திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், தேர் மேல் சென்று தீபாராதனைக் காண்பிக்கும்போது சீதாராமன் என்பவரின் மகனான சிவாச்சாரியார் முரளி நிலைதடுமாறி தேரின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த முரளியின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.