
சுய கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டால் எந்த நோயும் வராமல் தடுக்க முடியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
"திவ்வாஸ்' அமைப்பு சார்பில் பேறுகால சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியது: ஆரோக்கியம் என்பது இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஓர் அரிய விஷயம். அதைப் பேணிக்காப்பது அனைவரது தார்மிக கடமை. மனிதனுக்கு எத்தனையோ செல்வங்கள் இருக்கலாம். அவை அனைத்தையும் காட்டிலும், விலைமதிக்க முடியாத பெரும் செல்வம் ஆரோக்கியம் மட்டுமே. சம காலத்தில் மக்களிடையே மரபுவழி நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பொதுவாக பிறப்பு சார்ந்த நோய்களைத் தடுக்க முடியாது என்றாலும், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைத் தடுப்பது நமது கைகளில்தான் உள்ளது. மனித உடலில் ஏற்படும் நோய்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று எந்த விதமான காரணமும் இன்றி இயற்கையாகவே சில நோய்கள் ஏற்படுவது. அவை வெறும் 10 சதவீதம் மட்டுமே. அதே வேளையில் 90 சதவீத நோய்கள் நமது வாழ்வியல் முறைகளாலும், பழக்க வழக்கங்களாலும் வருகிறது. உதாரணமாக சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை, தனி மனித ஆரோக்கியத்துடன் ஒப்பிடலாம். வெள்ளம் வந்தபோது நேரிட்ட பாதிப்பில் இயற்கையின் பங்கு 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீத இடர்கள் மனிதப் பிழையால் நிகழ்ந்தவை. அதைப்போலத்தான் ஆரோக்கியமும்.
நமது முகம், இயற்கை நமக்கு அளித்தது. அதில், எந்தத் திருத்தமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதனை செயற்கையாக அழகுபடுத்துகிறோம். அதே நேரத்தில் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அக உறுப்புகளுக்கு கொடுப்பதில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் பேணிக் காத்தால் எத்தகைய நோயையும் தடுக்க முடியும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், திவ்வாஸ் அமைப்பின் தலைவர் நிறுவனர் உஷா ஸ்ரீராம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.