
திமுகவினரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்தவும், அவர்களின் மனக்கோட்டையைத் தகர்தெறியவும் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இருவரும் கூட்டாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் போனதற்கு, திமுகவினரால் நடத்தப்பட்ட பல்வேறு தில்லுமுல்லுகள்தான் காரணம் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
திமுக என்றாலே ஜனநாயக நெறிகளுக்கு விரோதமாகச் செயல்படும் வன்முறை மற்றும் ஊழல் இயக்கம் என்பது எம்ஜிஆர் நமக்கு சொல்லிச் சென்ற உண்மையாகும். தீய சக்தியின் இருப்பிடம் என்று ஜெயலலிதாவும் கூறியிருந்தார்.
காலங்கள் மாறினாலும், திமுகவின் அலங்கோலங்கள் மட்டும் மாறுவதே இல்லை என்பதை இன்றளவும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் கூட, தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டம் மக்களை வேதனையில் ஆழ்த்துகிறது.
பிரியாணி கடையைச் சூறையாடுதல், மகளிர் அழகு நிலையத்தை அடித்து நொறுக்குதல், சிறு வணிகர்களின் கடைகள் மீது தாக்குதல், சிந்தனையாளர்களை அடித்து துன்புறுத்துதல் என்று நீண்டு கொண்டிருந்த அவர்களின் அராஜகம், அண்மையில் திமுகவைச் சேர்ந்த மூத்த பெண் உறுப்பினரும், அவரது கணவரும், பணிப் பெண்ணும் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது என திமுகவினரின் அராஜகங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.
பொய்யான வாக்குறுதிகளையும், பொறுப்பற்ற செயல்திட்டங்களையும் வாய் கூசாமல் அவிழ்த்துவிட்டு, அண்மையில் பெற்ற வெற்றியால் தமிழகத்தைச் சீரழிக்க இன்னும் ஒரு வாய்ப்பு வந்துவிடும் என்று திமுகவினர் மனக்கோட்டை கட்டியுள்ளனர்.
இந்த அராஜகப் போக்கை தடுத்து நிறுத்தவும், திமுக ஆட்சி என்றும் இருண்ட காலம், இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்பதை உலகுக்கு உணர்த்தவும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்புதான் ஆகஸ்ட் 5 ஆகும்.
வேலூருக்கான வாக்குறுதிகள்: வேலூர் மாவட்டத்துக்கென பல புதிய திட்டங்களை விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம். கே.வி. குப்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கவும், கே.வி. குப்பம்-கவசம்பட்டில் பாலாற்றின் குறுக்கே தரை தடுப்பணை அமைக்கவும், கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தவும், குடியாத்தத்தில் புறவழிச் சாலை அமைக்கவும், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியைத் தூர்வாரி சீரமைக்கவும், குடியாத்தத்தின் உற்பத்திப் பொருள்களான கைத்தறி துணிமணிகள், தீப்பெட்டி, பீடி போன்றவற்றுக்கு சரக்கு சேவை வரியைக் குறைக்கவும் அதிமுக அரசு ஆவன செய்யும். வேலூரில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை வெற்றிபெறச் செய்யுங்கள். அதிமுகவின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி என்று அவர்கள் கூறியுள்ளனர்.