
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அந்த வெற்றி எவ்வளவு லட்சம் வித்தியாசத்தில் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. நியாயமாக இத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுகவின் பிரகாசமான வெற்றியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட சதி காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
எனினும், திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது என்றால், மத்திய, மாநில அரசுகளின் சதி மக்களிடம் எடுபடவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அதன்படி, வேலூரிலும் திமுக வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது.
நீட் தேர்வை கருணாநிதி மட்டுமின்றி ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. அந்தவகையில், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி பேரவையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி 2 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே, 2017-ஆம் ஆண்டிலேயே இந்தத் தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவையில் கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுக அரசு பதில் அளிக்கவில்லை. ஆனால், இரு நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றமே இதுதொடர்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உத்தரவு விடுக்கப்பட்ட நாளிலேயே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் உள்பட நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கெனவே 5 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திருநெல்வேலியில் தனலட்சுமி என்ற மாணவியும் சனிக்கிழமை தற்கொலை செய்துள்ளார். எனினும், நீட் தேர்வு விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தன்னை ஒரு விவசாயி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டுக்கு பொள்ளாச்சி விவகாரமே உதாரணம்.
கருணாநிதி மறைவுக்கு பின் அவரை அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய 6 அடி இடம் கேட்டிருந்தோம். அதை அளிக்க மாநில அரசு மறுத்துவிட்டதால், உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி பெற வேண்டிய நிலை ஏற்பட்டதை அனைவரும் அறிவர்.
தமிழக நலனுக்காகப் போராடிய தலைவரான கருணாநிதிக்கு 6 அடி இடம்கூட தர மறுத்த இந்த அரசுக்கு மக்களவைத் தேர்தல் மூலம் மக்கள் ஏற்கெனவே பாடம் புகட்டிவிட்டனர். வேலூர் தொகுதி தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.