
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா நிறைவேறுவதற்கு திமுகவும், அதிமுகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்றுள்ளன என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது தனி நபர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். இந்தச் சட்டத்தில் ஏற்கெனவே தனி நபர்களை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும் சூழலில், தற்போது விசாரிக்கும்போதே சொத்துகளை பறிமுதல் செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சட்டத் திருத்தம் செய்வது தேவையற்றது.
குறிப்பிட்ட பிரிவினரை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக எழுந்திருக்கும் புகார்களைப் புறம் தள்ளுவதற்கில்லை. சிறுபான்மையினரின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவும், அதிமுகவும் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்றிருப்பது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.