
மருத்துவமனைகள் உரிமம் பெறுவதற்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மற்றும் சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெறுவது அவசியம். அந்த உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் கால அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே உரிமத்துக்கு விண்ணப்பித்தன.
உரிமம் கோரி விண்ணப்பித்த மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்டந்தோறும் சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி இருக்கும் மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உரிமம் பெறுவதற்கு வரும் நவம்பர் மாதம் வரை காலஅவகாசம் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "உரிமம் பெற கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் விண்ணப்பிக்க முடியவில்லை. அவர்களின் வேண்டுகோளை ஏற்று உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.